கொங்கு வரலாறு

கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு. தேன் பூந்தாது, குரங்கு என்று பொருள் உண்டு. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மருத நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். "குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்" என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள்.


"கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" (குறுந் 1 ) என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான் கூறியுள்ளது. இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும், "கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்" (சிறுபா 184) எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு ௨.வே.ச. உரைகூறினார். "கொங்கு முதிர்நறு விழை" (குறிஞ் 83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது.


சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்குநாடு என்றே நாடுகள் தமிழகத்தில் இருந்தன. பின் தொண்டைநாடு சேர்ந்தது. கொங்கு நாட்டைக் காடு கொடுத்தது நாடு ஆக்கியவன் கரிகாலன். கொங்கு நாட்டு மக்களை வைத்தே காவிரிக்குக் கரை கட்டினான், கல்லணை கட்டினான்.